மொட்டை தலை, முறுக்கு மீசையில் தனுஷ் - 'ராயன்' : சினிமா விமர்சனம்

தனுஷின் 50-வது படமான 'ராயன்' நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

Update: 2024-07-27 01:43 GMT

சென்னை,

தனுஷ் தனது 50-வது படமான ராயனை இயக்கி நடித்துள்ளார். இப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. தற்போது இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

தன் சிறுவயதிலேயே பெற்றோரை இழக்கும் தனுஷ், தனது இரு தம்பிகளையும், தங்கையையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வருகிறார். இவர்களுக்கு செல்வராகவன் அடைக்கலம் கொடுக்கிறார். தம்பிகளை நன்றாக படிக்க வைத்து, தங்கைக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தனுஷ் உணவகம் ஒன்றை நடத்துகிறார்.

அப்போது மிகப்பெரிய தாதாக்களாக இருக்கும் சரவணன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவருக்குமான தொழில் போட்டியில் தனுஷின் குடும்பம் மாட்டிக்கொள்கிறது. இதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன? தனுஷ் நினைத்தபடி தன் தம்பிகளையும் தங்கையையும் வாழ்க்கையில் கரை சேர்க்க முடிந்ததா? என்பது மீதி கதை.

மொட்டை தலை, முறுக்கு மீசையில் சிறப்பான நடைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ். தம்பி, தங்கைகள் மீது அதீத பாசத்தைக் கொட்டுவது, தம்பி உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததும் கொலை மேல் கொலைகள் செய்வது என்று இரு பரிமாணங்களில் வெளுத்துக் கட்டுகிறார்.

அழுத்தமான வேடத்தில் வரும் துஷாரா விஜயன், நடிப்பால் படம் முழுவதுமே தன் இருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா மிரட்டுகிறார். தன் கதாபாத்திரத்தை ரசித்து பண்ணியிருப்பது அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தருகிறது.

சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் நேர்த்தியான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார்கள். அபர்ணா பாலமுரளி ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் சில நிமிடங்கள் வந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரகாஷ்ராஜ், சரவணன், செல்வராகவன், திலீபன் என அனைவரும் கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் கேமரா கோணங்கள் மிரள வைக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை தாங்கி பிடித்து இருக்கிறது.

படத்தில் சில பலவீனம் இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை, அட்டகாசமான பாடல்கள், அனல் பறக்கும் சண்டை காட்சிகள், அற்புதமான அரங்குகள், நடிகர்களின் அபாரமான நடிப்பு போன்றவற்றால் அதை காணாமல் போகச் செய்வதோடு, அசல் கமர்ஷியல் படத்தை கொடுத்து திறமையான இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார் தனுஷ்.

Tags:    

மேலும் செய்திகள்