'சமூக வலைதளங்களில் இருந்து விலகுகிறேன்' - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு
லோகேஷ் கனகராஜ் தயாரித்த 'பைட் கிளப்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சென்னை,
மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.இந்த நிலையில் 'ஜி ஸ்குவாட்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் தொடங்கியுள்ளார். அந்த 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் தயாரித்த 'பைட் கிளப்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி அடுத்த பட வேளைகளில் கவனம் செலுத்த உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "எனது 'ஜி ஸ்குவாட்' நிறுவன தயாரிப்பில் வெளியான 'பைட் கிளப்' படத்திற்கு நீங்கள் அளித்துள்ள வரவேற்புக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சிறிது காலம் சமூக வலைதளம் மற்றும் எனது செல்போனில் இருந்து விலகி எனது அடுத்த பட வேளைகளில் முழுவதுமாக கவனம் செலுத்த உள்ளேன். இந்த இடைப்பட்ட காலத்தில் என்னை யாரும் தொடர்பு கொள்ள முடியாது.
திரைத்துறையில் எனது ஆரம்ப காலம் முதல் தற்போதுவரை ரசிகர்கள் ஆகிய நீங்கள் எனக்கு அளித்து வரும் ஆதரவு மற்றும் அன்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்தி எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.