'புழு' திரைப்படத்தால் கிளம்பிய சர்ச்சை; நடிகர் மம்முட்டிக்கு கேரள அரசியல் கட்சியினர் ஆதரவு

நடிகர் மம்முட்டிக்கு எதிரான ஆன்லைன் விமர்சனங்களுக்கு அவரது ரசிகர்களும், அரசியல் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Update: 2024-05-15 12:53 GMT

திருவனந்தபுரம்,

மலையாள இயக்குனர் ரத்தீனா இயக்கத்தில், நடிகர் மம்முட்டி நடித்த 'புழு' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம், இந்த படம் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இருப்பதாக சிலர் விமர்சனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ரத்தீனாவின் கணவர் அளித்த பேட்டி ஒன்றில், 'புழு' திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரானது என்று தெரிவித்தார். மேலும், நடிகர் மம்முட்டி அந்த படத்தில் நடித்தது குறித்தும் அவர் விமர்சனம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மம்முட்டிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் நடிகர் மம்முட்டிக்கு எதிரான ஆன்லைன் விமர்சனங்களுக்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு கேரளாவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நடிகர் மம்முட்டி கேரளாவின் பெருமை' என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கேரள வருவாய்த்துறை மந்திரி ஏ.கே.ராஜன் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டியை முகமது குட்டி என்றும், நடிகர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை ஜோசப் விஜய் என்றும் அழைக்கிறார்கள். இதுதான் அவர்களின் அரசியல். கேரளாவில் இதுபோன்ற வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை' என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "மம்முட்டி போன்ற ஒரு மனிதரை மதம், ஜாதி என்ற பிரிவுகளுக்குள் அடைத்துவிட முடியாது. வெறுப்பு பிரசாரம் செய்பவர்களின் இழிவான மனதிற்கு மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக தெரிகிறார். வெறுப்பு பிரசாரத்தின் விஷம் நடிகர் மம்முட்டியை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது கேரள சமுதாயத்தின் கடமை" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்