'ஏழைகளுக்கு நடைமுறைகள் எளிதாக இல்லை' - விசா நிபந்தனைகளை சாடிய நடிகை டாப்சி

நடிகை டாப்சி விசா நிபந்தனை மற்றும் நடைமுறைகளை சாடி தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

Update: 2024-01-27 04:50 GMT

சென்னை,

'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி. 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா-2', 'கேம் ஓவர்' போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.

இந்தியில் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் டாப்சி, 'தக் தக்' படத்தின் மூலமாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'டங்கி' திரைப்படம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்பவர்களை பற்றிய கதையை மையமாக வைத்து வெளியானது. இதில் ஷாருக்கான் நாயகனாக நடித்து இருந்தார்.

இந்தநிலையில் நடிகை டாப்சி வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விசா நிபந்தனை மற்றும் நடைமுறைகளை சாடி தனது கருத்தை தெரிவித்து உள்ளார். பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதற்காக தற்போது அமலில் இருக்கும் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக உள்ளன. சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு விசா நடைமுறைகள் எளிதாக இல்லை.

தேவையான அளவுக்கு வங்கியில் பணம் இருப்பதை காட்டிவிட்டு செல்வந்தர்கள் சுலபமாக விசா பெற்று விடுகிறார்கள். ஆனால் குறைந்த வருவாயில் இருப்பவர்கள் விசா பெறமுடியாமல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். வங்கி இருப்பில் பணம் குறைவாக இருந்த காரணத்தால் டங்கி படக்குழுவினரில் சிலர், அமெரிக்கா விசா பெற முடியாமல் போய் விட்டது'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்