ஆண் நடிகர்களுக்கே அதிக சம்பளம்;அதில் 10% மட்டுமே எங்களுக்கு- பிரியங்கா சோப்ரா ஆதங்கம்

சினிமாவில் ஆண் நடிகர்களுக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே நான் பெற்றேன் என பிரியங்கா சோப்ரா கூறினார்.

Update: 2022-12-09 11:28 GMT


மும்பை

பிபிசியின் உலகின் 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தியா சார்பில் 4 பெண் நட்சத்திரங்கள் இடம் பெற்று உள்ளனர். அதில் ஒருவர் பிரியங்கா சோப்ரா அது தொடர்பாக பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில் பாலிவுட்டில் உள்ள சம்பள வேறுபாடு மற்றும் உடலமைப்பை குறை கூறுவது பற்றி பேசினார்.

வரவிருக்கும் அமெரிக்க உளவுத் தொடரான சிட்டாடலில் நடித்ததற்காக தனது 22 வருட சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக தனது ஆண் சக நடிகருக்கு இணையான ஊதியம் பெற்றதாக கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;-

‛‛எனது நிறத்தை வைத்து என்னை ‛கருப்பு பூனை' என கிண்டல் செய்தனர். சினிமாவில் ஆண் நடிகர்களுக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே நான் பெற்றேன். நான் மட்டுமல்லாது பல நடிகைகளுக்கு இது இன்னமும் தொடர்கிறது. மேலும் படப்பிடிப்பில் நடிகைகள் நீண்டநேரம் காத்திருக்கணும், நடிகர்களுக்கு அப்படி இல்லை, நேரத்திற்கு வந்து செல்வர். ஹாலிவுட்டிலும் இந்த நிலை உள்ளது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். 

இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் பெற்றார். பின்னர் தமிழில் நடிகர் விஜய் உடன் தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். 60 க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்

டைம் ஊடகத்தின் உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்கள் மற்றும் போர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்து உள்ளார். பிரியங்கா சோப்ரா பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.

நடிகை பிரியங்கா சோப்ரா-நிக் ஜோன்ஸ் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றடுத்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்