மலையாளப் படங்களின் வெற்றி 'ஆடுஜீவிதம்' வெற்றிக்கு வழிவகுக்கும் - பிருத்விராஜ்
நடிகர் பிருத்விராஜ், சமீபத்திய மலையாளத் திரைப்படங்களின் வெற்றி குறித்து மனந்திறந்து பேசியுள்ளார்.
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி நடிகர் பிருத்விராஜ், பல நேர்காணகளில் இத்திரைப்படம் குறித்துப் பேசிவருகிறார்.
இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் பிருத்வி ராஜ், சமீபத்தில் வெளியாகி தமிழ் உள்ளிட்ட பல மொழி ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட 'பிரம்மயுகம்', 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு' திரைப்படங்களின் வெற்றி 'ஆடுஜீவிதம்' படத்திற்கு நல்ல வரவேற்பையும், பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "எந்த மொழிப் படங்களின் வெற்றியும் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினருக்குக் கிடைத்த வெற்றிதான். 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'பிரேமலு' திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டும் வெற்றிபெறவில்லை.
அவை, எல்லா மொழி ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுப் பேசுபொருளாகவும் மாறியிருக்கின்றன என்பதுதான் முக்கியமானது. இந்த படங்களுக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும் 'ஆடுஜீவிதம்' படத்திற்குப் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இப்படங்களின் வெற்றி, நிச்சயம் 'ஆடுஜீவிதம்' படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றே நான் நினைக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.