இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன்: 3-வது முறையாக கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ்
இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் தனது டிவைன் டைட்ஸ் என்ற ஆல்பத்திற்காக 3-வது முறையாக கிராமி விருது வென்றுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்,
சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இசை உலகில் மிக பெரிய விருதுகளில் ஒன்றாக இந்த விருது கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பெங்களூருவை சேர்ந்தவரான, பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் தனது டிவைன் டைட்ஸ் (Divine Tides) என்ற ஆல்பத்திற்காக கிராமி விருது வென்றுள்ளார். அவர் பெறும் 3-வது கிராமி விருது இதுவாகும்.
அமெரிக்காவில் பிறந்தவரான கேஜ், தி போலீஸ் என்ற பிரிட்டிஷ் ராக் இசை குழுவை சேர்ந்த டிரம் வாசிப்பாளரான ஸ்டூவர்ட் கோப்லேண்ட் உடன் இந்த விருதினை பகிர்ந்து கொண்டுள்ளார். கேஜ் உடன் ஸ்டூவர்ட் இந்த ஆல்பத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார்.
இதுபற்றி ரிக்கி கேஜ் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், 3-வது முறையாக கிராமி விருது வென்றுள்ளேன். இதற்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். சொல்வதற்கு வார்த்தையின்றி உள்ளேன். இந்த விருதினை இந்தியாவுக்கு நான் அர்ப்பணிக்கின்றேன் என தெரிவித்து உள்ளார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு மற்றும் 2022-ம் ஆண்டுகளில் அவர் கிராமி விருதுகளை வென்றுள்ளார்.