தமிழில் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமான நவ்தீப் தொடர்ந்து நெஞ்சில், அஜித்குமாருடன் ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது வீரமாதேவி படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றார்.
இந்த நிலையில் நவ்தீப் விபத்தில் சிக்கி காலை உடைத்துக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க வீட்டுக்கு சென்ற நடிகை தேஜஸ்வி அங்கு நவ்தீப் கால் முறிவுக்கு சிகிச்சை எடுத்து கட்டுப்போட்டு ஊன்றுகோல் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதை பார்த்த பிறகே பலருக்கும் நவ்தீப் கால் முறிந்துள்ள தகவல் தெரிய வந்தது. எப்படி விபத்து ஏற்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும், ரசிகர்களூம் நவ்தீப் விரைவில் குணமடைய வாழ்த்தி வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.