பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

மெட்ரோ ரெயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-13 06:03 GMT

சென்னை,

மெட்ரோ ரெயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் ஆற்காடு சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே பேரிகார்டு போட்டு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த பின்னணி பாடகர் வேல்முருகன் பேரிகார்டை நகர்த்திவிட்டு காரில் செல்ல முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த மெட்ரோ ரெயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு, இந்த வழியில் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக வேல்முருகனுக்கும், உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், உதவி மேலாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த உதவி மேலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக உதவி மேலாளர் வடிவேலு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் பின்னணி பாடகர் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்