'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தை பாராட்டிய இயக்குநர் பார்த்திபன்
சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பார்த்து பாராட்டி வாழ்த்து பதிவிட்டுள்ளார்.;
சென்னை,
தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'மாமனிதன்' விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க வருகிறார்.
புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துவங்கியது. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி உட்பட பலர் பாடல்கள் எழுதுகின்றனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது. இந்த திரைப்படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் டி. அருளானந்து தயாரித்திருக்கிறார்.
கிராமத்துக் கலைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது. அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.
விரைவில் திரைக்கு வர உள்ள இந்த திரைப்படத்தை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பார்த்து பாராட்டி வாழ்த்து பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் "சீனு இராமசாமி அவர்களின் அக்மார்க் முத்திரையில்'கோழிப்பண்ணை செல்லதுரை' வெகு இயல்பான எளிமையான எள்ளளவும் சினிமாத்தனம் இல்லாமல்,பாசத்தின் வலிமையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தும் கிராமியப் படம்.நாயகன் செல்லதுரையாக வாழ்ந்திருக்கிறார் கிளைமேக்சில் நம்மையறியாமல் கண்கள் விசும்ப" என்றிருக்கிறார்.
'கோழிப்பண்ணை செல்லதுரை'திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.