ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை நோரா பதேஹி விசாரணைக்கு ஆஜர்

நடிகை நோரா பதேஹி டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு முன்பு விசாரணைக்கு இன்று ஆஜரானார்.

Update: 2022-09-15 11:14 GMT

Image Instagrammed By norafatehi

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஜாக்குலின் பெர்னாண்டாஸ் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதனால் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று காலை 11.30 மணிக்கு ஆஜரானார். போலீசாரின் விசாரணை முடிந்து நடிகை ஜாக்குலின் இரவு 8 மணி அளவில் விசாரணை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தொழிலதிபரின் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி பறித்ததாக சுகேஷ் மீது பதியப்பட்ட அதே வழக்கு தொடர்பாக நடிகை நோரா பதேஹி, டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை நோரா பதேஹிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுத்ததாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை நோரா பதேஹி டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவு முன்பு விசாரணைக்கு இன்று ஆஜரானார். இன்று ஆஜரான நோராவிடம் வழக்கு தொடர்பான பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பினர்.

ஏற்கனவே செப்டம்பர் 2ம் தேதி, இதே வழக்கில் நோரா பதேஹியிடம் டெல்லி போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து இருந்தனர். சென்னையில் 2020 டிசம்பரில் நோரா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றி போலீசார் நோராவிடம் விசாரித்து உள்ளனர். இந்த வழக்கில் நோரா பதேஹிக்கு ஜாக்குலினுடன் நேரடி தொடர்பு இல்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்