இந்தியை படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை - நடிகர் விஜய் சேதுபதி

'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

Update: 2024-01-07 14:07 GMT

சென்னை,

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, கத்ரீனா கைப் நடித்துள்ள திரைப்படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இந்த திரைப்படம் வருகிற 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய்சேதுபதி கூறியதாவது:-

'96' படம் பார்த்துவிட்டு இயக்குனர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அரை மணிநேரம் பேசினோம். அவருடைய முதல் படம் என்னுடைய பிறந்தநாள் அன்று வெளியானது. அப்போது என் நண்பர் ஒருவர் என்னிடம், ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குநர், ஸ்ரீராம் ராகவன் படம் இயக்கியிருக்கிறார் என கூறினார். அவரின் முதல் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருநாள் அவருடன் பணியாற்ற வேண்டும் என ஆசையிருந்தது.

'மெரி கிறிஸ்துமஸ்' படத்தின் கதையை அவர் சொன்னதும் எனக்கு பிடித்திருந்தது. ஸ்ரீராம் ராகவன் நடிகர்களுக்கு சுதந்திரம் கொடுப்பார். அவர் எப்படி வேலை வாங்குகிறார் என்பதே நமக்கு தெரியாது. அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கத்ரீனா கைபை நேரில் சந்திக்கும் முன், நம்மை விட சீனியர் நடிகர் என்ற பயம் எனக்குள் இருந்தது. அவரிடம் எந்த தலைக்கணமும் இல்லை. அவருடன் பணியாற்றியது மிகவும் கம்பர்டபிளாக இருந்தது.

நாங்கள் எல்லோரும் படத்தைப் பார்த்துவிட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். 'ஃபார்சி' தொடரில் நடிக்கும்போது இந்தியில் பேசி நடிப்பது கடினமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது.

தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம். இங்கே எல்லோரும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.Full View

Tags:    

மேலும் செய்திகள்