லவ் யூ தங்கமே...! நேத்து தான் கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள...! விக்னேஷ் சிவன் வியப்பு
லவ் யூ தங்கமே...! நேத்து தான் கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கு ஓராண்டு ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவிட்டுள்ளார்.;
சென்னை
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நாயகி அந்தஸ்தில் இருப்பவர் நயன்தாரா. தமிழ் நடிகைகளில் நயன்தாரா ஏற்கனவே அதிக சம்பளம் பெற்று வந்த நிலையில் கதாநாயகியை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்த பிறகு இன்னும் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.6 முதல் ரூ.7 கோடி வாங்கி வந்த அவர் இப்போது ரூ.10 கோடி கேட்கிறார் என்கின்றனர் `ஜவான்' இந்தி படத்திலும், `இறைவன்', `டெஸ்ட்' உள்ளிட்ட 4 தமிழ் படங்களிலும் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார்.
இவர் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இதே நாளில் தான் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
இன்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
திருமண நாள் குறித்து விகேஷ் சிவன் தனது சமூகவலைதளத்தில் கூறி இருப்பதாவது:-
"நேற்றுதான் எங்களுக்குத் திருமணம் ஆனது போலிருக்கிறது. இதற்கிடையில், நண்பர்கள் முதல் வருட திருமண நாள் வாழ்த்துகளை அனுப்புகிறார்கள். லவ் யூ தங்கமே எல்லா ஆசீர்வாதத்துடனும், அன்புடனும் நாங்கள் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம்.
இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. ஒன்றாகச் செய்ய நிறைய விஷயங்கள் உள்ளன. அனைத்து நல்ல மனிதர்களின் ஏராளமான ஆசீர்வாதங்களுடனும், சர்வ வல்லமையுள்ள கடவுளின் ஆசிர்வாதத்துடன், எங்கள் திருமண வாழ்க்கை. இரண்டாம் ஆண்டில். உயிர் மற்றும் உலகுடன்" என விக்னேஷ் கூறி உள்ளார்.குழந்தைகளுடன் நயன்தாராவின் புகைப்படத்தையும் விக்கி பகிர்ந்துள்ளார்.
நடிகை நயன்தாரா, நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி, சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து வந்த இந்த ஜோடி கடந்தாண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி திருமண பந்தத்தில் இணைந்தது. மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், விக்கி - நயன் ஜோடியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணம் செய்து கொண்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகள் திருப்பதி சென்றனர் கோவில் வளாகத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காக படப்பிடிப்பில் ஈடுபட்டனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் காலில் செருப்பு அணிந்தார் நயன்தாரா. அதேபோல வீடியோ எடுக்க வந்த குழுவினரும் செருப்பு அணிந்திருந்தனர்.
இது மிகப்பெரிய சர்ச்சையானது. பாஜகவினர் நயன்தாரா மீது வழக்கு கொடுக்கும் அளவுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் விக்கி மன்னிப்பு கடிதம் எழுதி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தங்கள் கல்யாணத்தையே திருப்பதியில் நடத்த வேண்டும் என்று நினைத்ததாகவும், இந்த சம்பவம் தெரியாமல் நடந்ததாகவும் சொல்லி இருந்தார்.
அடுத்ததாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் இவர்கள் திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்பும் உரிமையை பெற்றது. திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என ஒப்பந்தம் செய்தது. ஆனால் விக்கி ஆர்வக்கோளாறில் சில கல்யாண புகைப்படங்களை வெளியிட அது மிகப்பெரிய பிரச்சனையானது. நயன் - விக்கி கல்யாண செலவை முழுவதுமாக நெட்பிள்ஸ் நிறுவனம் ஏற்றதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு செலவு செய்த தொகையை திருப்பிக்கேட்டதாகவும், நயன்தாரா அவர்களை சமாதானம் செய்ததாகவும் சொல்லப்பட்டது.
அதன்தொடர்ச்சியாக சில நாட்களில் கல்யாண டீசர் வெளியானது. ஆனால் இன்று வரை அந்த கல்யாண வீடியோ மட்டும் வெளியாகவே இல்லை.
கல்யாணம் ஆகி ஜாலியாக இருந்த நயன் - விக்கி ஜோடி திடீரென கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக இன்ஸ்டாவில் பதிவிட்டனர். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
பிறகு தான் தெரிந்தது வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்தது. உடனே இந்த விவகாரம் மிகப்பெரிய புயலைக்கிளப்பியது. திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனபிறகு தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கும் நிலையில், எப்படி திருமணம் ஆன 4 மாதங்களில் இவர்கள் குழந்தை பெற்றெடுக்கலாம் என்ற விவாதம் அனைத்து சேனல்களிலும் நடந்தது.
தமிழக அரசு இதுகுறித்து விசாரணை நடத்தியது. அப்போது 5 ஆண்டுகளுக்கு முன்பே விக்கி - நயன் ஜோடி பதிவுத்திருமணம் செய்துகொண்டதாக ஆதாரங்களை கொடுத்ததும் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. ஆனால் அது இரு வரிகளில் எழுதியது போல சுலபமாக அமைந்துவிடவில்லை. விக்கி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டார்.