விடாத செல்பி போனை உடைச்சிடுவேன்...! கோபத்தின் உச்சியில் நயன்தாரா...!
வெளியே வந்த உடன் அவர்களை நோக்கி சிரித்த படி கையசைத்த நயன்தாராவை, அங்கிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு பணியை மறந்து காவல் அதிகாரியும் செல்போனில் படம் பிடித்தார்.;
சென்னை
தமிழ் திரையுலகில் 'நம்பர் ஒன்' நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு மே மாதம் கரம்பிடித்தார். இவர்களது திருமணம் சென்னையில் வெகு விமரிசையாக நடந்தது.இந்த தம்பதியினர் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி அறிவித்தனர். இந்த குழந்தைகளை வாடகை தாய் மூலம் இவர்கள் பெற்றுக்கொண்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி இருப்பதாக நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நயன்தாரா அறிவித்தார். ஒரு குழந்தைக்கு உயிர் ருத்ரோ நீல் என்.சிவன் என்றும், மற்றொரு குழந்தைக்கு உலக் தெய்விக் என்.சிவன் என்றும் பெயர் வைத்து இருப்பதாக அவர் அறிவித்தார்.
தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைத்த நிலையில் தங்களது குலதெய்வ கோவிலான தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள வழுத்தூர் ஆற்றங்கரை தெருவில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நயன்தாரா தம்பதியினர் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் குலதெய்வ கோவிலில் சாமி கும்பிடுவதற்காக வந்தனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த இவர்கள் அங்கிருந்து கார் மூலம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் ஆற்றங்கரை தெருவில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.காரில் இருந்து இறங்கிய நயன்தாராவை பார்த்து அங்கு கூடியிருந்த ரசிகர்கள்'லேடி சூப்பர் ஸ்டார் வாழ்க' என கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கோவிலுக்குள் சென்ற நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பய பக்தியுடன் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.பின்னர் பரிவார தெய்வங்களான சன்னாசி சட முனீஸ்வரர், நல்ல வீரப்பசாமி, மதுரை வீரன், நொண்டி கருப்பன், நாகலிங்கேஸ்வரர் ஆகிய சாமிகளையும் வழிபட்டனர்.
நயன்தாரா கோவிலுக்கு வந்த தகவல் அறிந்து அய்யம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் கோவிலில் வந்து குவிந்தனர்.கோவிலில் இருந்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் வெளியே வந்தபோது அங்கு கூடியிருந்த சிறுவர், சிறுமிகள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர்.
வெளியே வந்த உடன் அவர்களை நோக்கி சிரித்த படி கையசைத்த நயன்தாராவை, அங்கிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்பு பணியை மறந்து காவல் அதிகாரியும் செல்போனில் படம் பிடித்தார்.
பின் தொடர்ந்து வந்த கல்லூரி மாணவிகளுடன் செல்பி எடுத்த போது ஒரு பெண் நயனின் தோளில் கைவைத்ததால் மீண்டும் டென்சனான நயன்தாரா சத்தம் போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
காரில் ஏறிய விக்கி மற்றும் நயன்தாராவுடன் அங்குள்ள மக்கள் செல்பி எடுத்துக் கொண்டதோடு, உங்க படத்தை முழுசா பார்ப்போமுன்னு அவரை குளிர்விக்கும் விதமா பேசி வழியனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து திருச்சி ரெயில் நிலையம் வந்த நயன்தாராவை காண ரெயில் நிலையத்தில் கூட்டம் முண்டியடித்தது. ஆளாளுக்கு செல்போனில் படம் பிடித்ததால் நயன்தாரா கடு கடுவென காணப்பட்டார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை காண்பதற்காக ரசிகர்கள் மற்றும் ரெயில் பயணிகள் முண்டியடித்து வந்தனர்.
அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதுடன் அடாவடியில் ஈடுபட்டதால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது.
ஒருவழியாக கூட்டத்தை மீறி ரெயிலுக்குள் ஏறியபோது அங்கும் ஒரு ரசிகர் நயந்தாராவை செல்போனில் படம் பிடித்தபடி நின்றார், அடுத்த நொடி மூக்கு மேல கோபம் வந்த அம்மனாக முறைத்து பார்த்த நயன்தாரா அந்த இளைஞரை பார்த்து தன்னை படம் எடுக்க கூடாது என்றும் எடுத்த செல்போனை உடைத்து விடுவேன் என்றும் எச்சரித்தார்.