கணவருக்கு நிபந்தனை விதித்த நஸ்ரியா
நடிப்பை படப்பிடிப்பு தளத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என கணவர் மலையாள நடிகர் பகத் பாசிலுக்கு நிபந்தனை விதித்துள்ளார் நடிகை நஸ்ரியா.;
தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நஸ்ரியா மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கணவர் பற்றிய சுவாரஸ்ய தகவலை நஸ்ரியா பகிர்ந்தார். அவர் அளித்துள்ள பேட்டியில், ''பகத் பாசில் சிறந்த நடிகர். ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த பாத்திரமாகவே மாறி விடுவார். திருமணமான பிறகு வீட்டிற்கு வந்தால்கூட கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வருவதே இல்லை. ஒரு சினிமாவில் பயங்கரமாக சத்தம் போடும் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு வந்து வீட்டிலும் அதேபோல கத்திக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு ஒரு எச்சரிக்கையும், நிபந்தனையும் விதித்தேன். படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தால் ஒரு கணவர் போல இருக்க வேண்டும். நடிப்பை படப்பிடிப்பு தளத்திலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்று கண்டிப்போடு கூறினேன்" என்றார்.