நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

'நந்தன்' திரைப்படம் வரும் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Update: 2024-09-14 10:58 GMT

சென்னை,

சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை 'உடன்பிறப்பே' படத்தை இயக்கிய ரா.சரவணன் இயக்கியுள்ளார். சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் உள்பட பலர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குனர் ரா. சரவணன் பேசுகையில்,

'சினிமாவிற்கு வந்து பத்து வருடங்களாகி விட்டது. முதல் இரண்டு படங்களுக்கு மேடை எதுவும் அமையவில்லை, இதுதான் எனக்கு முதல் மேடை, முதல் இரண்டு படங்களுக்கும் சேர்த்து பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் பேச வேண்டிய விசயங்கள் எல்லாவற்றையும், எல்லோரும் பேசி விட்டார்கள்.

இந்த படத்திற்காக சசிகுமார் சார் முழுதாக உயிரையே தந்து நடித்து தந்தார். நடிகை ஸ்ருதிக்கு இது முதல் படம் என்றாலும், நான் எழுதிய கதாபாத்திரத்தை, அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அந்த ஊர் மொழியை கூட அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இந்தப் படத்துக்காக உழைத்து மறைந்து போன மூன்று பேரை இந்த இடத்தில் நினைவு கூறுகிறேன்', என்றார்

நடிகர் சசிகுமார் பேசுகையில்,

எங்களை வாழ்த்த பல வேலைகளுக்கு மத்தியில் இங்கு வந்திருக்கும் சீமான் அண்ணன் அவர்களுக்கும், இயக்குனர் வினோத் முதலான பிரபலங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குனர் சரவணனை எப்போது பார்க்கும்போதும் என் படத்தின் ஒரு வசனம் தான் எனக்கு ஞாபகம் வரும், 'உங்க நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது, ' என்கிற வசனம் தான் அது. உண்மையிலேயே சரவணன் நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

மற்றவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பம் குழந்தை என அனைத்தையும் விட்டுவிட்டு, சென்று நிற்பவர் தான் சரவணன், இப்போது அவர் பின்னால் நிற்பவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

எங்கள் படத்தை நாங்களே நன்றாக இருக்கிறது என்று சொல்வதை விட , நீங்கள் பார்த்து சொல்லுங்கள், இந்த திரைப்படம் உங்கள் எல்லோரையும் கண்டிப்பாக திருப்தி செய்யும்,'என்றார்

நடிகர் சமுத்திரகனி பேசுகையில்,

நந்தன் - ஒரு நல்ல கதையை நாம் எழுதிவிட்டால் போதும், அதுவே அதனை உருவாக்கிக் கொள்ளும், நாம் யாரையாவது நினைத்து எழுதியிருப்போம், ஆனால் அது முடிவு செய்வதுதான். அப்படித்தான் சசிகுமார் இந்த படத்திற்குள் வந்திருக்கிறார். அப்படித்தான் இந்த கதையில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் என்னையும் நடிக்கச் சொன்னார்கள். சரவணனுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அதை இந்தப் படம் நிவர்த்தி செய்யும்.

இன்றைய காலகட்டத்திலும் இது நடந்து கொண்டிருக்கிறது, அதை மாற்றி மனிதனாக மாற வேண்டும் என்பதுதான் இந்த திரைப்படம், இது சின்ன மாற்றத்தை ஏற்படுத்தினாலும், படத்தின் மிகப்பெரிய வெற்றி தான். இந்த படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி,' என்றார்.

நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசுகையில்,

நான் இனிமேல் நாயகியாக நடிப்பேனா என்பது தெரியாது, ஆனால் என்றென்றைக்கும் இந்த திரைப்படம், என் மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். சசிகுமார் சாரை, வேறு நிறைய படங்களில் ஹீரோவாக பார்த்திருக்கிறேன், ஆனால் கூட நடிக்கும் போது, மிக மிக எளிமையாக என்னிடம் பழகினார், நிறைய சொல்லித் தந்தார். மிக ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றிகள். இந்த படத்தில் உடன் நடித்த அனைவருக்கும் எனது நன்றிகள். கண்டிப்பாக உங்களை இந்த படம் மகிழ்விக்கும்,' என்றார்

இயக்குனர் எச். வினோத் பேசுகையில்,

நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன், அந்த வகையில் இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது. உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம்,' என்றார்

Tags:    

மேலும் செய்திகள்