கிரைம் திரில்லர் படத்திற்கு இசையமைக்கிறார் இயக்குனர் மிஷ்கின்..!
இயக்குனர் மிஷ்கின் தனது சகோதரர் இயக்கும் 'டெவில்' திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.;
சென்னை,
இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என்று பன்முகம் கொண்ட மிஷ்கின் தற்போது இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுக்க உள்ளார். மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கும் 'டெவில்' திரைப்படம் மூலமாக இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
'டெவில்' திரைப்படம் குறித்து இயக்குனர் ஆதித்யா கூறும்போது, "தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை ஒரு ஜோடி எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள் என்பது பற்றிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக 'டெவில்' உருவாகியுள்ளது. இதை கிரைம் திரில்லர் பாணியில் எடுத்திருக்கிறேன். இது போன்ற ஒரு படத்திற்கு இசையை பொறுத்தவரையில் மிஷ்கினின் உணர்வுகள் எனக்கு தேவைப்பட்டன.
இந்த திரைப்படம் 5 கதாபாத்திரங்களைச் சுற்றி வருகிறது. அவர்களில் ஒருவராக மிஷ்கினும் நடித்துள்ளார். இந்த படத்தின் நடிகர்களை தேர்வு செய்ய ஒரு வருடம் எடுத்துக்கொண்டேன். நடிகை பூர்ணா, நடிகர் விதார்த், ஆதித் அருண் மற்றும் சுபாஸ்ரீ ராயகுரு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிஷ்கின் ஏற்கெனவே 4 மெலடி பாடல்களை இந்த படத்திற்காக இசையமைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.