வளைகுடா நாடுகளில் மோகன்லால் படத்துக்கு தடை

மோகன்லால் நடித்த மான்ஸ்டர் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-19 02:31 GMT

மோகன்லால் மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்து இருக்கிறார். லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்பட மேலும் பலரும் நடித்துள்ளனர். வைசாக் டைரக்டு செய்துள்ளார். வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் மான்ஸ்டர் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். கேரளாவில் 3 நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

இந்த நிலையில் மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வளைகுடா நாடுகளில் படம் வெளியாகாவிட்டால் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் உடனடியாக இந்த பணிகளை முடிப்பது சிரமம் என்பதால் மான்ஸ்டர் இந்தியாவில் வெளியாகும் அதேநாளில் வளைகுடா நாடுகளில் வெளியாகாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்