டாம் குரூஸின் 'மிஷன் இம்பாசிபிள்' 7 ஆம் பாகம் டிரைலர் வெளியானது

அடுத்து வெளியாக உள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7-ம் பாகத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Update: 2022-05-24 08:15 GMT

சென்னை

டாம் குரூஸ் நடிக்கும் 'மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெகனிங் (பாகம் 1)' (Mission: Impossible Dead Reckoning Part 1) படத்தின் டிரைய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த ஆக்‌ஷன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன.

ஈதன் ஹண்ட் இந்த கேரக்டரை ஹாலிவுட் தாண்டி உலக ரசிகர்கள் யாரும் மறக்கமாட்டார்கள். புகழ்பெற்ற மிஷன் இம்பாசிபிள் படத்தில் வரும் டாம் குரூஸின் கேரக்டர்தான் ஈதன் ஹண்ட். சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996 ஆம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது.

முதல்பாகம் பெரிய அளவில் பெற்றதை அடுத்து மிஷன் இம்பாசிபிள் 2 வது பாகம் 2000 ஆம் ஆண்டு இதே நாளில் (மே.24) வெளியானது. சீக்ரெட் ஏஜண்டான ஈதன் ஹண்ட் தொற்று நோயைப்பரப்பும் வகையில் விற்கப்படும் வைரஸை தடுத்து உலகை காப்பதாக இருக்கும். இப்படத்தில் இவருடன் ஒரு குழு செயல்படும்.

2006 ஆம் ஆண்டு வெளியான முன்றாம் பாகத்தில் டாம் குரூஸுக்கு உதவும் கண்டுபிடிப்பாளராக பெஞ்ஜிடன் பாத்திரத்தில் சைமன் பெக் இணைந்தார். இவர் அதுமுதல் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிளின் அனைத்து பாகங்களிலும் முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதேபோல் மிஷன் இம்பாசிபிள் படத்தின் அனைத்து பாகங்களிலும் டாம் குரூஸுக்கு உதவும் பாத்திரத்தில் லூதர் ஸ்டிக்கெல் பாத்திரத்தில் விங் ரேம்ஸ் நடித்து வருகிறார். இவர் மிஷன் இம்பாசிபிள் 8 வது பாகத்திலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து 2011, 2015, 2018 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தன.

அந்த வகையில் அடுத்து வெளியாக உள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7-ம் பாகத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் மெக்யூரி இயக்கியுள்ள இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மிரட்டி உள்ளார் டாம் குரூஸ்.டிரைலரில் ஒரு சாவியை கைப்பற்ற டாம் க்ரூஸ் போராடுவதுபோல் உள்ளது. இப்படத்தில் ரெயிலில் சாகசம் கூடுதலாகவும், வழக்கம்போல் பைக் சாகசம், கார் சேஸிங் காட்சிகளும் உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

'மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங்' என பெயரிடப்பட்டு உள்ள இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இதன் முதல் பாகம் வருகிற 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் இரண்டாம் பாகம் 2024-ம் ஆண்டு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மிஷன் இம்பாசிபிள் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்