இவானா நடிக்கும் "மதிமாறன்".. கவனம் ஈர்க்கும் போஸ்டர்
மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “மதிமாறன்”. இப்படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "மதிமாறன்". இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே போன்ற படங்களில் நடித்த இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். வெங்கட் செங்குட்டுவன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்ய சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள "மதிமாறன்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.
தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களுடன் ஒரு காவலதிகாரி ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதுடன், ரசிகர்களுக்கு ஒரு தரமான திரில்லர் அனுபவம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரைவெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் "மதிமாறன்" படத்தின் டிரைலர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தினை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் எனும் புதிய நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.