'வாழை 2' திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ்
இயக்குனர் மாரி செல்வராஜ் ‘வாழை 2’ திரைப்படம் குறித்து வெற்றிவிழாவில் அப்டேட் கொடுத்துள்ளார்.
சென்னை,
செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி 25 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாழை. இதை கொண்டாடும் வகையில் இப்படத்திற்கான வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்த இரண்டு சிறுவர்கள். மேலும் இவர்களுடன் இணைந்து நடித்த நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
அப்போது மாரி செல்வராஜ் பேசுகையில், "நான் இசை வழியாக வளர்ந்த பையன். இசைதான் என் பூர்வீகம். அதற்குள்தான் நான் பிறக்க ஆரம்பித்தேன், நடனமாடினேன். எனக்குள் இருப்பதை நம்பி எடுப்பதற்கு சந்தோஷ் நாராயணனும் ஒரு முக்கிய காரணம். படம் முடிந்ததை பாடலின் வாயிலாக தெரியப்படுத்தலாம் என நினைத்தேன். அதே நேரம் பாடல் ஓடும்போது தியேட்டரிலிருந்து பார்வையாளர்கள் எழுந்து போய்விட்டால் என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால், எழுந்து போகமாட்டார்கள் என நிறைய நபர்கள் சொன்னார்கள். அதைக் காண திருநெல்வேலி தியேட்டர் ஒன்றில் படம்பார்க்க சென்றேன். மனதிற்குள் பாட்டு வரும்போது எல்லோரும் போய்விடுவார்களா? அவர்கள் போய்விட்டால் என்னால் முழுமையான வெற்றியை ஜீரணிக்க முடியாது? என்று பல சிந்தனைகள் ஓடியது. ஆனால் பாடல் வரும்போது தியேட்டரில் இருந்த 200பேரும் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது என்ன பிரச்சனை வந்தாலும் மக்களுக்குகாக கலையை தொடர்ந்து கொடுக்க வேண்டுமென நான் முடிவெடுத்தேன். என்னுடைய குடும்பம் மற்றும் ஊர் மக்களின் கண்ணீரை கலையாக மாற்றி கோடிக்கணக்கான மக்களுக்கு கடத்துவதே எனக்கு போதும் என்று நினைத்தேன்.
உங்ககிட்ட பெருமைப்பட ஒன்றுமே இல்லையா எப்போதுமே கூலித் தொழிலாளிகளை காட்டுகிறீர்கள் என்றும் முப்பாட்டனை பற்றி எடுக்க வேண்டுமென்றும் சிலர் சொல்கிறார்கள். நான் ஏன் அவனைப் பற்றி எடுக்கணும். எனக்கு நான்தான் பெருமை, என்னுடைய கண்ணீரை கலையாக மாற்றியதுதான் என்னுடைய பெருமை. எனக்கு பிறகு அதே ஊரிலிருந்து இரண்டு சிறுவர்கள் மேடையில் உட்கார வைத்ததுதான் எனக்கு பெருமை. அந்த சிறுவர்கள் மேலும் இரண்டு நபர்களை உருவாக்குவார்கள். கனடாவில் வாழும் தமிழர்கள் அந்த இரண்டு சிறுவர்களை வரும்போது அழைத்து வாருங்கள் என்று சொல்கிறார்கள். இதைதான் என் வெற்றியாக பார்க்கிறேன். என்னிடம் சொல்லியே தீரவேண்டிய கதைகள் நிறைய இருக்கிறது. அதை முட்டிமோதி சொல்லிட்டுதான் நான் போவேன். அப்படி நான் போகும்போது நிறைய நபர்களை உருவாக்கியிருப்பேன் அவர்கள் எனக்கு பிறகு கதை சொல்வார்கள்.
நான் அசாதாரணமான ஆள்தான். ஏனென்றால் 30 வருஷம் அந்த மண்ணுக்குள் உயிரைப்பிடித்து ஓடி வந்து, அதே வலியை மக்களிடம் கடத்த நிறைய மெனக்கெட்டு வருகிறேன். வாழை படத்தின் வெற்றியை என்னால் கையாளமுடியாமல் வீட்டுக்குள்ளயே இருந்தேன். அவ்ளோ நடுக்கமாக இருந்தது. ஏனென்றால் வந்த பதிவுகள் எல்லாம் அந்த மாதிரி வந்தது. இந்த படம் பார்த்துவிட்டு என் வீடு தேடி வந்து பலர் என் கைகளை பற்றிக்கொண்டனர். நிறைய பேர் எங்களை இயக்குநர் காட்ட தவறவிட்டுவிட்டார் என்று சொன்னார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை இந்த கதை எனக்கும் அந்த நாளுக்குமான கதைதான். ஆனால், இந்த படத்தை பதிவு செய்ததன் மூலமாக சாதி, மதம் பார்க்காமல் இஸ்லாமிய தோழர்கள்தான் அந்த மக்களை காப்பாற்றினார்கள் என்ற உண்மை வெளிவந்தது எனக்கு போதுமானது. இன்றைக்கு அனைத்து மக்களும் அதை பேசுவது மிகவும் சந்தோஷம். மாரி செல்வராஜ் என்பவன் யார்? என்பதை மக்கள் தெரிந்துகொள்ள எடுக்கப்பட்ட படம்தான் வாழை. இதிலும் அவர்களுக்கு குழப்பம் இருந்தால் நிச்சயமாக வாழை 2 வரும். அந்த கதை இன்னும் என்னை புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும் நன்றி" என்றார்.