'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு

'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள் மீது மரடு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-04-24 11:25 GMT

சென்னை,

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.

மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் உலகளவில் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இப்படம் அடுத்த மாதம் 3-ம் தேதி முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது கேரள போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் சிராஜ் வலியத்தரா. இவர் 'மஞ்சுமெல் பாய்ஸ்' பட தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,

'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்துக்காக ரூ.7 கோடி முதலீடு செய்தேன். இப்படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் 40 சதவீதத்தை எனக்கு கொடுப்பதாக உறுதியளித்திருந்தனர். ஆனால், முதலீடு செய்த பணத்தைக்கூட திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை விசாரித்த நீதிமன்றம், 'மஞ்சுமெல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கும்படி உத்தரவிட்டது. மேலும், தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்களான ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர் மற்றும் பாபு ஷாஹிர் ஆகியோர் மீது எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவுப்படி மரடு போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்