மலையாள நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் மரணம்
மாரடைப்பு காரணமாக மலையாள திரைப்பட நடிகர் நிர்மல் பென்னி காலமானார்.
திருவனந்தபுரம்,
மலையாள நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 37. நகைச்சுவை நடிகராக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார்.
'நவகதர்க்கு ஸ்வாகதம்' படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்திருந்த இவர், சினிமாவிலும் நடித்து வந்தார். பின்னர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் 'ஆமென்' படத்தில் கொச்சச்சன் (இளைய பாதிரியார்) கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார். நிர்மல் பென்னி இதுதவிர 'தூரம்' உட்பட மொத்தம் ஐந்து படங்களில் மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார்.
திருவனந்தபுரத்தில் வசித்து வந்த அவருக்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். அவரின் மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நிர்மல் பென்னி காலமான செய்தியை தயாரிப்பாளர் சஞ்சய் படியூர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.எனது அன்பு நண்பரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.