முண்டாசுப்பட்டி பட நடிகர் 'மதுரை மோகன்' காலமானார்..!

பிரபல துணை நடிகர் 'மதுரை மோகன்' உடல் நலக்குறைவால் காலமானார்.

Update: 2023-12-09 07:22 GMT

மதுரை,

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் மதுரை மோகன். இவருக்கு விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடிப்பில் வெளியான 'முண்டாசுப்பட்டி' திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

அதன்பிறகு ரஜினி முருகன், வீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'வீரன்' திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திரைப் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் காளி வெங்கட், 'ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை "முண்டாசுப்பட்டி" படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் "வீரன்" பட இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் அவர்களுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குனர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்