"கருத்தைப் பாருங்கள், கருத்து சொன்னவரை பார்க்காதீர்கள்" - கல்லூரி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேச்சு

யாரும் யாரிடமும் தோற்பதும் இல்லை, ஜெயிப்பதும் இல்லை என கல்லூரி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.

Update: 2022-10-01 14:20 GMT

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப்போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது அந்த சமயத்தில் நடக்கும் ஒரு சிறிய நாடகம் மட்டுமே.

அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் அதை நன்றாக கவனித்து கேளுங்கள். பள்ளி, கல்லூரி எல்லாம் அதை தான் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பாடங்கள் எல்லாம் யாரோ ஒருவர் படித்து, புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு பாடமாக ஆக்கியது தான். அவ்வாறு நாம் படிக்கும் பாடங்களை நம் அறிவைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும்.

அதற்கு பெயர் தான் பகுத்தறிவு. அது கடவுளாக இருந்தாலும், சக மனிதனாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் சரி, கருத்தைப் பாருங்கள், கருத்து சொன்னவரை பார்க்காதீர்கள். கருத்து உங்களுக்கு பயன்படுகிறதா என்பதை மட்டும் பாருங்கள்.

புரிந்து கொள்ளும் திறன் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கண்ணதாசன் சொன்னது போல் 'தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா' என்ற பாடலின்படி, தன்னை உணர்ந்து கொள்வது தான் மிக முக்கியம். நாம் தான் சிறந்த புத்தகம்."

இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்