'கேரளம் மீண்டு வர துணைநிற்போம்' - நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்

அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் என்று ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-31 13:36 GMT

சென்னை,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளநிலையில், கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

'வயநாடு துயரம் , இயற்கை பேரிடர் எனும் போதிலும் என் சகோதர சகோதரிகளின் உயிரிழப்பை கண்டு தாங்க முடியாத மனவேதனையில் செய்வதறியாது தவிக்கிறேன். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் அரசுத்துறையை சார்ந்த பணியாளர்கள் , தனியார் தொண்டு நிறுவனங்களின் மனிதநேய உள்ளங்கள் செய்து வரும் அளப்பரிய களப்பணிக்கு அனைவரும் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளம் மீண்டு வர துணைநிற்போம்', இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று முன்னதாக நடிகர் விக்ரம் மீட்பு பணிக்காக கேரள முதல்- மந்திரியின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 20 லட்சம் தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்