கிஷோர் நடிக்கும் வீரப்பன் வாழ்க்கை வெப் தொடரை எதிர்த்து வழக்கு
கிஷோர் நடிக்கும் வீரப்பன் வாழ்க்கை வெப் தொடரை எதிர்த்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்தார்.;
கிஷோர் நடிக்கும் வீரப்பன் வாழ்க்கை வெப் தொடரை எதிர்த்து வழக்குசந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கும் முயற்சிகள் நடந்து வந்தன. தற்போது இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி உள்ளது. இந்த தொடரை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக டைரக்டர் ரமேஷ் மகள் விஜேதாவும், நடிகர் ராஜ்குமார் வேடத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர்.
மேலும் சில முக்கிய நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் தயாராகிறது. வெப் தொடருக்கு தணிக்கை இல்லை என்பதால் வீரப்பனின் முழு வாழ்க்கையையும் வெப் தொடரில் கொண்டு வருவேன் என்று டைரக்டர் ரமேஷ் கூறினார்.
இந்த நிலையில் வீரப்பன் வாழ்க்கை வெப் தொடரை படமாக்குவதற்கு தடை விதிக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்தார்.