நடிகர் லால் மீது பெண் இயக்குநர் குற்றச்சாட்டு

நடிகர் லால் படப்பிடிப்பில் மோசமாக நடந்துகொண்டதாக பெண் இயக்குநர் குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2024-09-08 09:16 GMT

எர்ணாகுளம்,

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, முகேஷ், இடவேல பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சில நாள்களுக்கு முன் நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டது.

இந்த நிலையில், யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய பெண் இயக்குநர் ரேவதி எஸ். வர்மா பிரபல மலையாள நடிகர் லால் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். ரேவதி தமிழில் ஜூன். ஆர், மலையாளத்தில் 'மாட் மேட்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நேர்காணலில் பேசியபோது, 'மாட் மேட் படப்பிடிப்பின்போது நடிகர் லால், நான் பெண் என்கிற காரணத்தாலே என்னை மோசமான முறையில் நடத்தினார். காட்சிகளை எடுப்பதற்கு முன் இயக்குநராக நான் சொல்வதைக் கேட்காமல் படப்பிடிப்பு தளத்தில் அவமரியாதை செய்தார். பலமுறை இதை அனுபவித்தேன். அவருடன் சேர்ந்துகொண்டு இன்னும் சில முக்கிய நடிகர்களும் இதையே செய்தனர்.

குறிப்பாக, அப்படப்பிடிப்பில் அவர்களிடம், 'நான் ஷாட் ஒகே சொன்னதற்குப் பின் நாற்காலியில் அமர்ந்தால்போதும்' என சொன்னேன். அதற்கு ஒருவர், 'நீங்கள் சொல்வதைக் கேட்பதற்குப் பதில் கழிவறையில்போய் அமர்ந்துகொள்ளலாம்' என்றார். இதைக்கேட்டு கோபத்தால் மயக்கம் அடைந்துவிட்டேன். ஹேமா கமிட்டி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயரை மறைப்பது பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்த அநீதி. " எனக் கூறியுள்ளார்.

லால் தமிழில் சண்டக்கோழி, கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்றவர். அவர், பெண் இயக்குநரை அவமரியாதை செய்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .

Tags:    

மேலும் செய்திகள்