நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' இசை வெளியீட்டு விழா

'கோழிப்பண்ணை செல்லதுரை' படம் வரும் 20ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Update: 2024-09-14 07:51 GMT

சென்னை,

விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி.அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, வரும் 20ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், 'குட்டி புலி' தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது பட குழுவினருடன் ' மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இசையை விஜய் சேதுபதி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடிகர் யோகி பாபு பேசுகையில், ''மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் தயாரிப்பாளர் அருளானந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பிறந்த நாளின் போது என்னை சந்தித்து 'நல்லதொரு கதை. நடித்துக் கொடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியுடன் நிறைய நேரம் பேசி இருக்கிறேன். அவருடன் பேசும் போது இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசி இருக்கிறேன். அவரும் சரியான தருணம் அமையட்டும் என சொன்னார். இந்த திரைப்படத்தில் நல்லதொரு வேடம் இருக்கிறது, வாருங்கள் என அழைத்தார். ஒரு ஜிப்பாவும் வேஷ்டியும் வந்தது. அவரிடம் வேடிக்கையாக இதை யார் போட்டு கொண்டிருந்தது என கேட்டேன். அவரும் வி கே ராமசாமி என்றார்.

இந்தப் படத்தில் ஏகன் சொன்னது போல் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏகனுடைய பெரியப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். படங்களில் நான் லோக்கலாக 'கவுன்ட்டர்' அடித்து கொண்டிருப்பேன். ஆனால் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட என்னை 'கவுன்ட்டர்' அடிக்க விடாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தி விட்டார் இயக்குநர் சீனு ராமசாமி. படமாக பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

அதன் பிறகு விஜய் சேதுபதி பேசுகையில், ''சகோதரன் ஏகனுக்கு முதலில் வாழ்த்துகள். இதுபோன்ற மேடையில் 11 ஆண்டுகளுக்கு முன் நிற்கும்போது உங்கள் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. நான் மிகவும் நடுக்கத்துடன் தான் இருந்தேன். ஆனால் உங்கள் முகத்தில் நல்லதொரு நம்பிக்கை தெரிகிறது. பாடல்களிலும் காட்சிகளிலும் உங்களுடைய நடிப்பு நன்றாக இருக்கிறது.

தயாரிப்பாளர் மேத்யூ. 21 வயது தான் ஆகிறது. ஆனால் மேடையில் தெளிவாக பேசுகிறார். நான் மேடையில் பேசுவதற்கு இன்றும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்காக அவருடைய தந்தையான தயாரிப்பாளர் அருளானந்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏகன் பார்ப்பதற்கு லட்சணமாகவும் நம் மண்ணின் மைந்தனாகவும் இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையில் அழகாக இருக்கிறார்கள். படத்தின் கதையும் அழகாக இருக்கிறது.

சீனு ராமசாமியிடம் எனக்கு மிகவும் பிடித்தது... எத்தனை முறை இந்த தேனியில் அவர் படம் எடுத்தாலும், அவர் நூறு படம் எடுத்தாலும் ஒவ்வொரு படத்திலும் தேனியை வித்தியாசமான கோணங்களில் காண்பிப்பார். புதிதாக காண்பது போல் இருக்கும். அதுதான் அவருடைய பலம்.

கதை சொல்லும் போதும் அதை படமாக்கும் போதும் எந்த தருணத்திலும் அவர் சிறிது யோசித்தோ அல்லது தடுமாறியோ நான் பார்த்ததே இல்லை. தன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்தால் அதனை எவ்வளவு சிக்கனமாக செலவு செய்து படத்தின் தரத்தை குறைக்காமல் ரசிகர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் படத்தை நிறைவு செய்ய முடியுமோ, அதனை நேர்த்தியாக செய்யக்கூடியவர் சீனு ராமசாமி. அந்த வகையில் நான் பார்த்து வியந்த இயக்குநர் சீனு ராமசாமி. இதுவரை அவரது இயக்கத்தில் நான் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திலிருந்து 'மாமனிதன்' வரை அவருடன் இணைந்து பணியாற்றும் போது எங்களுக்கான பட்ஜெட் அதிகமாக கிடைத்தாலும் படத்திற்கு என்ன தேவையோ அதை பொறுப்புணர்ந்து செயல்படுபவர் சீனு ராமசாமி. அதனால் சீனு ராமசாமி போன்ற ஒரு இயக்குநர் மூலம் ஏகன் அறிமுகமாவதற்கு ஏகன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

நேரம் கிடைக்கப்போதெல்லாம் தான் கற்றுக் கொண்ட விஷயத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடியவர் சீனு ராமசாமி. நிச்சயம் படப்பிடிப்பு தளத்தில் அவர் ஏகனுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருப்பார்.

இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தனுக்கு என்னுடைய வாழ்த்துகள். அண்ணன்-தங்கை இடையேயான பாடலில் புல்லாங்குழல் இசை மிக இனிமையாக இருந்தது.

இந்த விழாவிற்கு என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழா எப்படி இருக்கிறது என்றால்... நான் இருந்த இடத்தில் என்னுடைய 'பாஸ்ட்' டும், 'பிரசென்ட்'டும் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் உங்களுடைய 'பியூச்சர்' என்னை விட சிறப்பாக இருக்க வேண்டும் என ஏகனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கும் சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலனுக்கு நன்றி. ஒரு திரைப்படத்தை சக்திவேலன் பார்த்து நன்றாக இருக்கிறது என ரசித்தால் அந்த திரைப்படத்தை தமிழக மக்களும் ரசிக்கிறார்கள். 'கில்லி' திரைப்படத்தை மறு வெளியீடு செய்து வெற்றி பெற செய்தவர் நீங்கள். என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் நீங்கள் தான் கில்லி. உங்களுடைய சக்தி இந்த படத்திற்காக மொத்தமாக இறங்கட்டும்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்