ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'கோழிப்பண்ணை செல்லதுரை'

இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

Update: 2024-08-30 09:13 GMT

சென்னை,

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. கடைசியாக சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. விஜய் சேதுபதி சிறப்பாக நடித்திருந்தார். தற்போது, சீனு ராமசாமி அடுத்ததாக 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ஏகன் நடித்துள்ளார். பிரிகிடா சஹா கதாநாயகியாக நடிக்க, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் பகுதியில் நடைபெற்று முடிந்தது.இந்த நிலையில், இப்படத்தின் டீசரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் 22வது ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் கோழிப்பண்ணை செல்லதுரை தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது என இயக்குநர் சீனு ராமசாமி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். செப்டம்பர் 12 முதல் 21 வரை நடைபெறும் இவ்விழாவில் 18ம் தேதி இரவு 8.00 மணிக்கு கோழிப்பண்ணை செல்லதுரை 'வோர்ல்டு பிரீமியர்' அந்தஸ்தில் திரையிடப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். 22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் இதுவரை வேறெந்த தமிழ்த் திரைப்படங்களும் தேர்வு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது பெருமையாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து தெரிவித்தார். ஏற்கனவே மாமனிதன் திரைப்படம் விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகள் குவித்த நிலையில் இப்படமும் அதேபோல் பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்