வயநாடு நிலச்சரிவு: குஷ்பு, சுஹாசினி, மீனா இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி

தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி ஆகியோர் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளனர்.;

Update: 2024-08-10 13:57 GMT

கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் மூன்று கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா இணைந்து ரூ.50 லட்சம், நயன்தாரா விக்னேஷ் சிவன் இணைந்து ரூ.20 லட்சமும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி, லிசி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளனர்.

அப்போது எடுத்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த குஷ்பு, 'சென்னையைச் சேர்ந்த சிலர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவுடன் வயநாடு பேரிடர் நிவாரணத்திற்காக 1 கோடி ரூபாய் வழங்கினோம். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினோம். ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், ஸ்ரீப்ரியா, மணிரத்னம், குஷ்பூ சுந்தர், மீனா சாகர், ஜி ஸ்கொயர், கல்யாணி பிரியதர்சன், கோமளம் சாருஹாசன், லிஸ்ஸி லட்சுமி, மைஜோ ஜார்ஜ், ஷோபனா, ரகுமான், சாம்பியன் பெண் ஆகியோருக்கு நன்றி. எங்கள் பிரார்த்தனைகள் வயநாடு மக்களுடன் உள்ளன' என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்