இயக்குனர் ஹலிதா ஷமீமின் புதிய படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் கதீஜா ரஹ்மான்

கதீஜா ரஹ்மானுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-13 13:49 GMT

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், தனது 13 வயதில் 'எந்திரன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' என்ற பாடலில் சில வரிகளைப் பாடியிருந்தார். அண்மையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இவரது குரலில் ஒலித்த 'சின்னஞ்சிறு நிலவே' பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இது தவிர ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 'மூப்பில்லா தமிழே தாயே', 'ஃபரீஷ்டா', ஷான் ரோல்டன் இசையில் அறிவு எழுதிய 'சகவாசி' உள்ளிட்ட ஆல்பம் பாடல்களிலும் கதீஜாவின் குரல் கவனம் பெற்றது. தனது தந்தையைப் போல் தொடர்ந்து இசைத்துறையில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கதீஜா கூறியிருந்தார்.

இந்த நிலையில் 'பூவரசம் பீப்பி', 'சில்லுக்கருப்பட்டி', 'ஏலே' ஆகிய படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அடுத்து உருவாகி வரும் 'மின்மினி' படத்தின் மூலம் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். குழந்தைப்பருவம் முதல் இளமைக்காலம் வரையிலான மாற்றங்களை எதிர்கொள்பவர்கள் பற்றிய கதையாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2015-ம் ஆண்டே முடிந்துவிட்டது. இருப்பினும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளாக நடித்தவர்கள் இளம் வயதினர்களாக வளர்ந்த பிறகு 7 வருடங்களுக்குப் பின் கடந்த ஆண்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கதீஜா ரஹ்மானைப் போன்ற திறமையான இசையமைப்பாளருடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்