கன்னட அமைப்பினர் அவமதிப்பு... சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ்

நடிகர் சித்தார்த், தான் நடித்துள்ள சித்தா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு சென்று இருந்தார். அப்போது கன்னட அமைப்பினர் திடீரென்று மேடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்துக்காக சித்தார்த்திடம் நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Update: 2023-09-30 02:36 GMT

நடிகர் சித்தார்த், தான் நடித்துள்ள சித்தா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு சென்று இருந்தார். அங்குள்ள ஒரு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது கன்னட அமைப்பினர் திடீரென்று அங்கு வந்தனர். அவர்கள் மேடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். தமிழ் நடிகர்கள் இங்கு வரக்கூடாது. தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்று சித்தார்த்தை அவமதித்து ஆவேசமாக குரல் எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கன்னட அமைப்பினர் எதிர்ப்பை தொடர்ந்து சித்தார்த் அங்கிருந்து வெளியேறினார். இதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்காக சித்தார்த்திடம் நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில். "நீண்ட காலமாக இந்தப்பிரச்சினையை தீர்க்க தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதற்குக் காரணமான தலைவர்களையும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத எம்.பிக்களையும் கேள்வி கேட்காமல் சாமானிய மக்களையும், சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்