கங்கனாவின் `எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தள்ளி வைப்பு

ஜூன் 14-ம் தேதி திரையரங்கில் வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-05-16 16:03 GMT

அரசியல் கருத்துகளைப் பேசி தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தற்போது திரைத்துறையிலிருந்து நேரடியாக அரசியலுக்குள் பிரவேசித்திருக்கிறார். தன் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக கங்கனா தீவிரமாகக் களப்பணி ஆற்றி வருவதால் ஜூன் 14-ம் தேதி திரையரங்கில் வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த அவரின் 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி  தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவரான மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட 'தலைவி' படத்தில் நடித்திருந்தார் கங்கனா. அதைத் தொடர்ந்து மற்றுமொரு அரசியல் ஆளுமையான இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்பட்ட `எமர்ஜென்சி' படத்தை கங்கனாவே இயக்கி நடித்திருந்தார். ஜான்சி ராணியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `மணிகர்ணிகா' படத்தைத் தயாரித்த `மணிகர்ணிகா பிலிம்ஸ்' இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படம் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் `மணிகர்ணிகா பிலிம்ஸ்',  " கங்கனா ரானவத் நாட்டிற்கான மிகப்பெரிய பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துத் தேர்தல் களத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார். நாட்டிற்கான பணியே முதன்மையானது என்பதால் அதை முடித்துவிட்டு தனது `எமர்ஜென்சி' படத்தில் கவனம் செலுத்துவார். இதனால், ஜூன் 14-ம் தேதி வெளியாகவிருந்த `எமர்ஜென்சி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த மறு அறிவிப்பு வெளியாகும்" என்று அதிகாரபூர்வமாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்