'குணா' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை

'குணா' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-10 13:20 GMT

சென்னை,

சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரோஷினி, ஜனகராஜ், ரோஹினி உள்ளிட்டப் பலர் நடிப்பில்,1991-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் 'குணா'. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் மூலம் 'குணா' படம் 2கே கிட்ஸ் தலைமுறையிடமும் டிரெண்ட் ஆனது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் படத்தையும், அதன் பாடல்களையும் இன்றைய தலைமுறையினர் கொண்டாடிவருகின்றனர்.

குறிப்பாக, 'டெவில் கிச்சன்' என அழைக்கப்படும் குணா குகையில் படமாக்கப்பட்ட 'கண்மணி அன்போடு காதலன்...' பாடலும் இணையத்தைக் கலக்கியது. கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் 'குணா' திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 'குணா' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கன்ஷியாம் என்பவர் 'குணா' பட மறு வெளியீட்டுக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், குணா திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய பிரமிட் மற்றும் எவர் கிரீன் மீடியா நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் படத்தின் முழு உரிமையாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி, 'குணா' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்து, மனுவுக்கு வரும் 22-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரமிட் மற்றும் எவர் கிரீன் மீடியா நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்