சிக்கலில் கமல் படம்?
இந்தியன்-2 படத்தை தொடங்குவது பற்றி ஷங்கர் எந்த தகவலையும் வெளியிடாமல் இருப்பதால் அதன் கதி என்ன என்று வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.;
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன்-2 படம் பல்வேறு காரணங்களால் 3 வருடங்களாக முடங்கி உள்ளது. இந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக வெளியாகும் தகவல்களை படக்குழுவினர் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். ஆனாலும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் தாமதமாகி வருகிறது.
ஷங்கர் தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானி, ஜெயராம் ஆகியோர் நடிப்பில் உருவாகும் 'ஆர் சி 15' என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சியிலும் இருக்கிறார். அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் ஹிருத்திக் ரோஷன், ராம் சரண் ஆகியோரை வைத்து புதிய படம் இயக்க ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாகவும் சர்வதேச தரத்தில் தண்ணீருக்கு அடியில் இதன் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியன்-2 படத்தை தொடங்குவது பற்றி ஷங்கர் எந்த தகவலையும் வெளியிடாமல் இருப்பதால் அதன் கதி என்ன என்று வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனாலும் இந்தியன்-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கமல்ஹாசன் தொடர்ந்து பேசி வருவதால் ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.