கலைஞர் நூற்றாண்டு விழா : அனைத்து விதமான படப்பிடிப்புகளும் 2 நாட்கள் ரத்து

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 'கலைஞர் 100 விழா' ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2023-12-11 06:28 GMT

சென்னை,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக 'கலைஞர் 100 விழா' பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 24 ஆம் தேதி 'கலைஞர் 100 விழா' நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 'கலைஞர் 100 விழா' அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 5 மற்றும் 6-ந் தேதிகளில் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 1 முதல் 5-ந் தேதிகளில் பாடல் மற்றும் நடன காட்சிகள் படமாக்குவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான பாடல் காட்சி என்றால் சிறப்பு அனுமதி பெற்று நடத்தி கொள்ளலாம் எனவும் ஏற்கனவே விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த 23, 24-ந்தேதிகளில் படப்பிடிப்புகளை நடத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்