4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'பிரதர்' படத்தின் டீசர்
ஜெயம் ரவி நடித்த 'பிரதர்' படத்தின் டீசர் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இவர் தற்போது, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் 'பிரதர்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மக்காமிஷி எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் டிரண்டாகி வந்தது. பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினர் டீசரை வெளியிட்டனர்.
இந்நிலையில், 'பிரதர்' படத்தின் டீசர் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.