'ஜமா' படத்தின் டீசர் நாளை வெளியாகிறது!

நடிகை அம்மு அபிராமி நடிக்கும் ‘ஜமா’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2024-07-13 09:12 GMT

சென்னை,

'கூழாங்கல்' திரைப்படத்தை உருவாக்கிய லெர்ன் அண்ட் டெக் புரோடக்சன் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடந்ததாக படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்தின் கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்தார். இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடல்களில் மிகைப்படுத்தலை தவிர்த்து, உண்மையான தெருக்கூத்து இசையைப் பயன்படுத்தியதால் படம் இயல்பாக வந்துள்ளது. 'அவதாரம்' படத்திற்குப் பிறகு இந்த வகையான இசையை அவர் மீண்டும் தேர்வு செய்துள்ளார்.

அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பார்த்தா எம்.ஏ. படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீகாந்த் கோபால் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

அம்மு அபிராமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவர். இவர் பைரவா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுஷின் அசுரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக கண்ணகி, ஹாட்ஸ்பாட் போன்ற படங்களில் நடித்துள்ளார் அம்மு அபிராமி.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அதைத் தொடர்ந்து இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் டீசர் நாளை (ஜூலை 14) மாலை 4 மணி அளவில் வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்