மக்கள் பிரச்சினையைப் பேசினா அது நல்ல படம் -இயக்குநர் பேரரசு
இந்த மாதிரி கதை கொண்ட படங்கள் தான் நல்ல படம். மக்கள் எல்லா பிரச்சினைகளையும் செய்தியாக கடந்து போகிறார்கள்.
மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தும் கதையம்சம் கொண்ட படமாக 'பாய்' உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பேரரசு, எது நல்ல படம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இந்த தலைப்பைத் தணிக்கைக்கு ஏற்று பிறகு தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக நல்லிணக்கம் பேசும் படமாகத் தான் இருக்கும். மக்கள் இன்று எல்லா பிரச்சினைகளையும் வெறும் செய்தியாகக் கடந்து போகிறார்கள். அதற்குத் தீர்வு என்ன என்று பார்ப்பதில்லை. இது பற்றி ஆட்சியாளர்கள் யாரும் யோசிப்பதில்லை."
"ஒரு சிறந்த படம் என்பது எது? நல்ல கதையா? திரைக்கதையா? வசனமா? பாடல்களா? சண்டைக் காட்சிகளா? எந்த திரைப்படம் சமூக பிரச்சினையைச் சொல்கிறதோ அது சிறந்த படம். மக்களுக்கு நல்ல விஷயத்தைச் சொல்வது சிறந்த படம் தான். அப்படிப் பார்க்கும் போது பாய் மிகச் சிறந்த படம். இந்த காலகட்டத்தில் நல்ல படங்களை மக்கள் வரவேற்கிறார்கள் கொண்டாடுகிறார்கள்," என்று தெரிவித்தார்.
கே.ஆர்.எஸ். ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். இத்ரிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இப்படத்தை பி.வி.ஆர். பிக்சர்ஸ் வெளியிடுகிறது.