'மதமும், கடவுளும் அரசியல்வாதிகள் கையில் சிக்குவது மிகவும் ஆபத்தானது' - நடிகர் கிஷோர்

காந்தாரா திரைப்படத்திலும் வனத்துறை அதிகாரி வேடத்தில் கிஷோர் குமார் நடித்து இருந்தார்.

Update: 2024-01-23 11:56 GMT

சென்னை,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க நேற்று கோலாகலமாக நடந்தது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் கன்னடத்தில் முன்னணி வில்லன் நடிகராக வலம்வரும் கிஷோர் குமார் இதனை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இவர் தமிழில் 'வெண்ணிலா கபடி குழு', 'ஆடுகளம்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு (2022) வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற காந்தாரா திரைப்படத்திலும் வனத்துறை அதிகாரி வேடத்தில் கிஷோர் குமார் நடித்து இருந்தார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'கோவில், மன்னர்கள் மற்றும் அரசியல் வைத்து கட்டுப்படுத்துவது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கே சென்றதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

கோவில்களை கட்டி அதில் அவர்களின் பெயர்களை செதுக்கி வைத்துக்கொள்வது, கோவிலை கட்டியவர்களின் விரல்களை வெட்டுவது. வானுயர பேனர்களை வைத்து தங்களின் பெருமைகளை பேசிக்கொள்வது போன்ற செயல்கள் தற்போது வரை அழியாமல் தொடர்கிறது.

மதமும், கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாசாரத்திற்கும் எதிர்காலத்திற்கும் அது தீங்கு விளைவிக்கும்' என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்