சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டல் - போலீசில் புகார்
சார்மி தயாரித்த படத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் தன்னை மிரட்டுவதாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் பூரி ஜெகன்னாத் புகார் அளித்துள்ளார்.;
தமிழில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள சார்மி, தற்போது பிரபல தெலுங்கு டைரக்டர் பூரி ஜெகன்னாத்துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் லைகர் என்ற படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. இதனால் அதிர்ச்சியான சார்மி சமூக வலைத்தளத்தில் இருந்தே விலகினார். இந்த படத்தை பூரி ஜெகன்னாத் டைரக்டு செய்து இருந்தார். லைகர் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்டு நஷ்டமடைந்த வினியோகஸ்தர்கள் சார்மியிடமும், பூரி ஜெகன்னாத்திடமும் நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். இந்த நிலையில் வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் தன்னை மிரட்டுவதாக ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் பூரி ஜெகன்னாத் புகார் அளித்துள்ளார். அதில் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படியும், வீட்டிலும் பாதுகாப்பு போடும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.