சென்னையில் நாளை இளையராஜாவின் இசை நிகழ்ச்சி.. மெட்ரோ ரெயில் நிர்வாகம் சிறப்பு சலுகை
சென்னை நந்தனம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இளையராஜாவின் நிகழ்ச்சி செல்வதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.
சென்னை,
தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. 1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத வெளியான படம்தான் அன்னக்கிளி. இப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 -க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார்.
இந்தநிலையில், 'இசை ராஜா' இளையராஜா 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். அதில் அவரது எவர் கிரீன் பாடல்கள் பாடப்பட உள்ளன.
இந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.சரண், மது பாலகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் பாட உள்ளனர். இந்த இசை நிகழ்ச்சி நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்த தகவலை இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விழாவினை மெர்குரி நிறுவனம் இணைந்து நடத்துகிறது. இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் சென்னை மட்டுமல்லாமல் லண்டன், பாரிஸ் மற்றும் சூரிக் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.
'இளையராஜாவின் - இன்னிசை கச்சேரி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மார்க் மெட்ரோ உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது. "இசை ஆர்வலர்களுக்கான சிறப்புச் சலுகையாக, கச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு பிரத்யேக மெட்ரோ பாஸ்கள் கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும். இது அவர்கள் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து, மெட்ரோ வழியாக அவர்கள் இடத்திற்கு திரும்புவதற்கு உதவும்" என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.