'உயரம் காரணமாக ஒதுக்கப்பட்டேன்' - நடிகை அபிராமி வருத்தம்
10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்த அபிராமி, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.
தமிழில் 'வானவில்', 'மிடில் கிளாஸ் மாதவன்', 'தோஸ்த்', 'சமுத்திரம்', 'சார்லி சாப்ளின்' போன்ற பல படங்களில் நடித்தவர், அபிராமி. 2004-ம் ஆண்டு 'விருமாண்டி' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அன்னலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் நடித்து முத்திரை பதித்தார். 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்த அபிராமி, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அபிராமி சில விஷயங்களை பகிர்ந்தார். அவர் கூறுகையில், "என்னுடன் நடித்த பலர் என்னை விட உயரமானவர்கள். வேறு மொழிக்கு போனபோது என்னை விட உயரம் குறைவானவர்களுடனும் நடித்தேன். ஆனால், 'அந்த பொண்ணு ரொம்ப உயரமாக இருக்கிறாரே...' என்று என்னை ஒதுக்கிய சம்பவங்களும் உண்டு.
மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததற்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏதாவது விழாக்களுக்கு சென்றால் ரசிகர்கள் காட்டும் அன்பு பரவசப்படுத்துகிறது. எனக்கு நிறைய கடிதங்களும், பரிசு பொருட்களும் வரும். மகிழ்ச்சியாக இருக்கும்.
தற்போது சமூக வலைத்தளங்களில் எனக்கு நிறைய செய்திகளையும், கேள்விகளையும், வாழ்த்துகளையும் ரசிகர்கள் அனுப்புகிறார்கள். என்னால் முடிந்த அளவு ரசிகர்களின் கருத்துகளை கேட்டு வருகிறேன்" என்றார்.