உங்களுக்காக அன்பை மட்டுமே வைத்திருக்கிறேன்... உங்களை மகிழ்விப்பதே மகிழ்ச்சி எனக்கு - நடிகை ராஷ்மிகா உருக்கம்

உங்களுக்காக அன்பை மட்டுமே வைத்திருக்கிறேன்... உங்களை மகிழ்விப்பதே மகிழ்ச்சி எனக்கு என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.;

Update: 2022-11-09 13:23 GMT

சென்னை,

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வேதனையுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், "ஒரு சில விஷயங்கள் என்னை சில நாட்களாக, சில மாதங்களாக ஏன், சில வருடங்களாக மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இதுபற்றி வெளிப்படையாகப் பேச வேண்டிய தருணம் இது என்று நினைக்கிறன். இதில் நான் என்னைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளைப் பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களால், நெகட்டிவான விமர்சனங்களால் தாக்கப்படுபவராகவே நான் இருந்து வருகிறேன். இதுபோன்றவற்றை சந்திக்கக்கூடிய ஒரு துறையைதான் நான் என் வாழ்கையாக்கிக் கொண்டிருக்கிறேன்.

நான் எல்லோராலும் நேசிக்கப்படும் ஒருவராக இருக்க முடியாது என்பது தெரியும். அதற்காக எதிர்மறையான கருத்துகளைப் பரப்புவது சரியில்ல. எல்லோரையும் எப்படி மகிழ்விப்பது என்பதுதான் எனது தினசரி சிந்தனையாக இருக்கிறது.

உண்மையில், என்னை மட்டுமல்ல நம் அனைவரையும் பெருமைப்படுத்துவதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். ஆனால், சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வரும் பொய்யான தகவல்களையும், குறிப்பாக நேர்காணல்களில் நான் சொல்லாத விஷயங்களுக்காக நான் கேலி செய்யப்படுவது என்னை வருத்தத்திற்குள்ளாக்குகிறது.

என்னைப்பற்றிய விமர்சனங்கள் அர்த்தமுள்ளதாக இருந்தால் நான் அவற்றை வரவேற்கிறேன், ஏனென்றால் அவை என்னை மேம்படுத்த உதவுகின்றன. என்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. உங்களுக்காக நான் கடினமாகவும் சிறப்பாகவும் உழைப்பேன். ஏனென்றால் உங்களை மகிழ்விப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்