''அவமானங்களை சந்தித்தேன்" - நடிகர் யோகிபாபு
சினிமாவில் ஆரம்ப காலத்தில் எவ்வளவோ அவமானங்களை சந்தித்து இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன் என்று நடிகர் யோகிபாபு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.;
நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். பொம்மை நாயகி என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார். நாயகியாக சுபத்ரா வருகிறார். ஷான் இயக்கி உள்ளார்.
பொம்மை நாயகி பட விழாவில் யோகிபாபு பேசும்போது, "சினிமாவில் ஆரம்ப காலத்தில் எவ்வளவோ அவமானங்களை சந்தித்து இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். என்னை பிரபலமாக்கியதும் வளர்த்ததும் காமெடிதான். நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். எனவே காமெடியை ஒருபோதும் விடமாட்டேன். இந்த முகத்திலும் ஏதோ ஒன்று தெரிகிறதே என்று நினைத்து என்னை நம்பி அழைத்தால் கதாநாயகனாக நடிக்க தயாராக இருக்கிறேன். பொம்மை நாயகி படத்தின் இயக்குனர் ஷான் என்னை காமெடி பண்ண விடவில்லை. தந்தை-மகள் கதை என்பதால் ஒரு அப்பாவின் வலியை படம் உணர்த்தும். கடந்த 5 மாதங்களாக ஒரு அப்பாவாக நானும் அதை உணர்கிறேன்'' என்றார்.
டைரக்டர் பா.ரஞ்சித் பேசும்போது, "சிறு பட்ஜெட் படங்களை வாங்க ஓ.டி.டி தளங்கள் ஆர்வம் காட்டவில்லை. மக்களும் சிறிய படங்கள் ஒடிடியில் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்கிற மனப்பான்மையில் உள்ளனர்" என்றார்.