'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்தது பெருமை; நடிகர்கள் கார்த்தி, விக்ரம் பேட்டி

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது என்று விக்ரம், கார்த்தி கூறினார்கள்.

Update: 2022-09-29 08:59 GMT

'பொன்னியின் செல்வன்'

'பொன்னியின் செல்வன்' படத்துக்காக திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத், பெங்களூரூ, டெல்லி சென்ற நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை திரிஷா ஆகியோர் சென்னை திரும்பினர்.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கார்த்தி நிருபர்களிடம் கூறும்போது, ''பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்தது பெருமை. இந்த படம் தமிழ்நாட்டின் பெருமையாகவும் உள்ளது. 'பொன்னியின் செல்வன்' படம் வெளியாக இருப்பதை நினைத்து பதற்றமாக இருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் உள்ளது. சோழர்களின் வரலாற்றை எடுத்துச்சொல்லும்போது மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.

தேர்வுக்கு முன்னால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட மனநிலைதான் இப்போது எங்களுக்கு இருக்கிறது. நாம் எல்லோருமே இந்தியர்கள்தான் என்பதை பலரும் தற்போது உணர்கிறார்கள்.

பல வரலாறுகளை நாம் படிக்கவில்லை. இப்போது படிப்பதற்கு எல்லோரும் ஆர்வமாக உள்ளார்கள். தமிழின் பல நல்ல படங்கள் மற்ற மாநிலங்களில் நன்றாக ஓடுவதால் நம்மை மதிக்கின்றனர். மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே இந்தியா முழுவதும் பிரபலமானவர்கள். நமக்கான அடையாளமாக இவர்கள் உள்ளனர்'' என்றார்.

படிக்கும் பழக்கம் அதிகரிப்பு

மேலும் சென்னை தியாகராயநகரில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு கார்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''மூன்று வருட உழைப்புக்கு பலன் கிடைக்கும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் பிற மாநிலங்களிலும் 'பொன்னியின் செல்வன்' கல்கி எழுதியது என்று எல்லோருக்கும் தெரிகிறது. படத்துக்கான ஆர்வத்தோடு நம் நாட்டு கலாசாரம், அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி ஆட்சி நடத்தினார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தால் படிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. மணிரத்னம் காதல், அரசியல் என்ற எந்த மாதிரியான படம் இயக்கினாலும் காட்சியில் உயர்தரம் இருக்கும். இப்படத்திலும் அந்த தரம் நிச்சயம் இருக்கும்'' என்றார்.

நடிகர் விக்ரம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ''பொன்னியின் செல்வன்' படத்துக்காக பிற மாநிலங்களுக்கு சென்றபோது வரவேற்பு சிறப்பாக இருந்தது. நாம் நமது சோழர்களின் பெருமையை சொல்லும்போது மற்ற மாநிலத்தவர்களும் சோழர்களை கொண்டாடத் தொடங்கி விட்டனர். இந்த படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது'' என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்