விமான நிலையத்தில் இந்தி: நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு உண்மையா? மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன...!

நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு உண்மையா? மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2022-12-29 12:09 GMT

மதுரை

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த், தற்போது கமல்ஹாசனுடன் 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகிலும் பிரபல நடிகராக இருக்கிறார். சமூக அரசியல் தொடர்பான கருத்துகளையும் வலைத்தளத்தில் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்று சொன்னதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக சாடி உள்ளார்.

இதுகுறித்து வலைத்தளத்தில் சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். வயதான எனது பெற்றோர் கொண்டு வந்த பைகளில் இருந்த நாணயங்களை எடுக்கும்படி சொன்னார்கள். தொடர்ந்து இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர். ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே பேசினார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி கடுமையாக நடந்து கொண்டனர். வேலையற்றவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள்" என்று கூறியுள்ளார். சித்தார்த் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்த நிலையில், விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மதுரை விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- சித்தார்த் சென்னை செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையம் வந்தார். மாலை 4.15 மணியளவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு படையின் சோதனை மையத்திற்கு வந்தார். சித்தார்த்திடம் முகக்கவசத்தை அகற்றுமாறும் ஐடி கார்டு காட்டுமாறும் கேட்கப்பட்டது.

இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறைதான். அவருடைய குடும்பத்தினரின் உடமைகளும் பரிசோதனை செய்யப்பட்டது. சித்தார்த்தின் சோதனை நடந்த போது பணியில் இருந்தது தமிழகத்தை சேர்ந்த பெண் வீரர்தான் பணியில் இருந்தார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழில்தான் அந்த பெண் பாதுகாப்பு வீரர் பேசினார். இந்தியில் பேசவில்லை. குடும்பத்தினரின் உடமைகளை அடிக்கடி சோதனை செய்ததாக சித்தார்த்தும் அவரது குடும்பத்தினரும்தான் கோபம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த தெலுங்கு பேசும் பொறுப்பு அதிகாரி ஏன் அடிக்கடி சோதனை நடக்கிறது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

10 நிமிடத்திற்குள் அங்கிருந்து கோபத்துடன் நடிகர் சித்தார்த் விமானம் ஏறும் இடத்திற்கு கிளம்பிவிட்டார். அவருடன் வந்தவர்களும் சென்றுவிட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் இந்தியில் பேசி சித்தார்த்திடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. சித்தார்த் வைத்த குற்றச்சாட்டுக்கள் தவறானது. விமான நிலையத்திற்கு வந்தது முதல் அவர் புறப்பட்டு செல்வது வரை உள்ள காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது" என்றார்.

சித்தார்த்தின் குற்றச்சாட்டுகளுக்கு சிஆர்பிஎப் வீரர் ஒருவர் பதிலளித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் கூறியுள்ளதாவது:

எல்லாத்துக்கும் வணக்கம். இந்த பதிவு யாருக்குனா, நடிகர் சித்தார்த் அவர்களே, நீங்க மதுரை விமான நிலையத்துல போயி, துணை ராணுவ வீரர்கள் ஹிந்தியில் பேசச் சொல்லி துன்புறுத்துனதா சொல்றீங்க.

ஆங்கிலத்துல பேசச் சொல்றதுக்கு நீங்க யாரு. இல்லை துணை ராணுவ படைய, இந்திய துணை ராணுவ படைய ஆங்கிலத்துல பேசங்கனு சொல்றதுக்கு நீங்க யாருனு நான் கேட்கிறேன்.

நீ ஏன் ஆங்கிலத்துல பேசச் சொல்ற. நாங்க ஏன் உங்களிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். நாங்க என்ன பிரிட்டிஷ் காரங்களா? இல்லை வெள்ளக்காரங்களா? இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழிய நீ பேசச் சொல்லு. அதை பேசுறோம்.

நீங்க சொல்லு சார், தமிழில் பேச சொல்லுங்கன்னு அப்படின்னா, அங்க யாராவது ஒரு அதிகாரி இருப்பான். கண்டிப்பா தமிழ்காரங்க இருப்பாங்க. தமிழ்காரன கூப்பிட்டு பேச வச்சிருப்பாங்க. இல்லையா, தெலுங்கு தெரியும்னா, தெலுங்கு பேசச்சொல்லு. தெலுங்கு காரங்க இருப்பாங்க. நீ வந்துட்டு என்ன ஆங்கிலத்துல பேசு அப்படின்னா வெள்ளக்காரனா?வெள்ளக்காரன ஹிந்தி தான் கத்துட்டுருக்கான் இங்க வந்து.உடனே...நாங்க துன்புறுத்திட்டோமா?

அப்புறம்,இன்னொரு பதிவு போட்டிருந்த. பெற்றோர் பையில் ஏதோ சில்லரை காசு இருந்துச்சு அது எடுக்க சொன்னாங்கன்னு. சில்லரை காசு இருந்தது எடுக்க சொன்னாங்களே எந்த மொழியில் சொன்னாங்க?.நீ எப்படி புரிஞ்சுக்கிட்ட? சைகையில சொன்னாங்களா? நீ எப்படி புரிஞ்சுக்கிட்டு அத சொல்லு பர்ஸ்ட். அது எப்படி புரிஞ்சுக்கிட்டு நீ பதிவு போட்ட?

அப்புறம் இன்னொனு போட்டிருந்த, வேலையில்லாதவர்கள் ரெம்ப துன்புறுத்துறாங்கன்னு. நீ ரெம்ப வேளையில இருக்கியா? நீ என்னென்ன சில்மிஷம், நீ அட்டகாசம் பண்ணிருக்கன்னு யாருக்கும் தெரியாத திரையுலகத்துல?

டூட்டி பார்க்கிறவங்கள வந்துட்டு கண்ணியமா பேச கத்துக்க எப்பயுமே.அவுங்க டூட்டி பார்க்கிறாங்க அங்க

அவுங்க வேலை அது. அரைமணி நேரம் இல்லை. இரண்டு மணி நேரம் சந்தேகத்துல நிக்க வச்சா நின்னு தான் ஆகணும் நீ. போயி காமி அங்கருந்து ஒரு எட்டு. எட்டு வச்சு காமி ஒரு எட்டு வச்சு காமிக்கிறேன்னு. போக முடியாது உன்னால.

ஏனா டூட்டி பார்க்கிற இடத்தில நாங்க பவரு.

எதற்கெடுத்தாலும் கூழ கும்பிட்டு போற அரசியல்வாதின்னு நினைச்சியா நீ எங்கள?எதுக்கெடுத்தாலும் ஓகே சார்... சரிங்க சார்ன்னு சொல்றதுக்கு.

டிபார்ட்மென்ட் பவர்ன என்னனு புரிஞ்சுக்க பர்ஸ்ட். உங்க பெற்றோர் மட்டும் கிடையாது.டிபார்ட்மென்ட்ல சேர்ந்தவுங்க சொந்தக்காரங்க, அவுங்க பெற்றோரே வந்தால் கூட அவுங்களுடைய கடமைய முடிச்சு தான் ஆவாங்க.=

அவுங்க வேலையா பார்க்க தான் செய்வாங்க. அதேமாதிரி ஆங்கிலத்துல பேச சொல்றதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.ஹிந்தி தெரியலைனு சொல்லிட்டு போ. வெட்கப்பட்டு சொல்லு.''எனக்கு ஹிந்தி கத்துக்கலை சார். எனக்கு ஹிந்தி தெரியாது சார். இந்தியாவுல இருக்கிறேன் ஹிந்தி தெரியாதுனு '' சொல்லு.

உனக்கு என்ன வெட்கமா இருக்கா? ஆங்கிலம் தெரியாதுனு சொல்றதுக்கு நாங்க வெட்கபடணும்னு அவசியம் கிடையது. எங்களுக்கு ஆங்கிலம் படிக்கணும்னு அவசியம் கிடையாது. இந்திய மொழியில அலுவல் மொழி ஹந்தி ஒண்ணு இருக்கு. அது கத்துட்டிருக்கோம்

தமிழ் தெரியும். தெலுங்கு காரனுட்ட தெலுங்கு பேசுவோம். மலையாளகாரனுட்ட மலையாளம் பேசுவோம்.

அதனால், இந்தியாவுல வாழ்றளவுக்கு எங்களுக்கு தெரியும். நீ தான் வெளியூர்ல வெள்ளக்காரனு கூடடன் சுத்துறவன். அதனால் உனக்கு தான் ஆங்கிலம் தெரியணும். அதனால வார்த்தைய பார்த்து யூஸ் பண்ணுங்க. ஜெய்ஹிந்த். இவ்வாறு அந்த வீடியோவில் சிஆர்பிஎப் வீரர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்