ஹீரோவாக அறிமுகமாகும் வனிதா விஜயகுமார் மகன்
நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். வனிதா தனது மகள் ஜோவிகாவை ஹீரோயினாக்க போராடி வரும் சூழலில் அவருக்கு முன்பே அண்ணன் ஸ்ரீஹரி ஹீரோவாகி உள்ளார்.;
நடிகர் விஜயகுமாரின் வாரிசுகளில் இரண்டாவது மகள் அனிதாவைத் தவிர எல்லா வாரிசுகளுமே திரைத்துறையில் நடித்துள்ளனர். குறிப்பாக மகள் வனிதா, ஆகாஷ் என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் வனிதாவுக்கும் பிறந்த மகன் தான் ஸ்ரீஹரி. வனிதாவுக்கும் ஆகாஷூக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட தனது மகன் தன்னுடன்தான் இருக்க வேண்டும் வழக்குத் தொடர்ந்தார் வனிதா.
தந்தை ஆகாஷூம் ஸ்ரீஹரி தன்னிடம் இருக்க வேண்டும் என்றார். இறுதியில் ஸ்ரீஹரியை தந்தையுடன் வளர அனுமதித்தது நீதிமன்றம். என்னதான் பிரிந்திருந்தாலும் தன் மகன் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த வனிதா தயங்குவதில்லை. ஆனால், 22 வருடங்கள் ஆகியும் வனிதாவின் செயல்பாடுகளால் பேசாமல் இருக்கிறார் ஸ்ரீஹரி.
ஸ்ரீஹரிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. இதற்கான முயற்சியையும் அவர் எடுத்து வருகிறார். நண்பர்களுடன் சேர்ந்து மியூசிக் வீடியோ உருவாக்குவது, குறும்படங்கள் எழுதி, இயக்கி, நடித்து வருவது என இருந்தார். இப்போது பெரிய திரையில் நடிக்க வேண்டும் என்ற அவரது இந்த முயற்சி தற்போது கைகூடியுள்ளது. அதாவது இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படம் ஒன்றில்தான் ஸ்ரீஹரி நடிகராக அறிமுகமாக உள்ளாராம்.
'கும்கி', 'மைனா' என நடிகர்கள் விக்ரம் பிரபு, அமலாபால் என பலருக்கும் அவர்களது கரியரில் மறக்க முடியாத ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பிரபு சாலமன். அதுபோலவே, ஸ்ரீஹரிக்கும் அவர் அறிமுகப் படத்திலேயே ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.