தியேட்டரில் நரிக்குறவப்பெண்ணுக்கு அனுமதி மறுப்பு... ஜி.வி.பிரகாஷ், பிரியா பவானி சங்கர் கண்டனம்

Update: 2023-04-01 03:09 GMT

சிம்பு நடித்த 'பத்து தல' படத்தை பார்க்க நரிக்குறவப்பெண் ஒருவர் 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட சிலருடன் கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்க்க வந்தபோது கையில் டிக்கெட் இருந்தும் அவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்க ஊழியர் மறுத்துவிட்டார்.

என்னிடம் டிக்கெட் உள்ளது. உள்ளே விடுங்கள் என்று பலமுறை அந்தப்பெண் வற்புறுத்தியும் அனுமதிக்கவில்லை. இது சம்பந்தமான வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி தீண்டாமைக்கொடுமை என்று பலரும் கண்டித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இந்த விவகாரம் கவனத்துக்கு வந்ததும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்று தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்து உள்ளது.

நரிக்குறவப்பெண்ணை தியேட்டரில் அனுமதிக்க மறுத்ததற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதிக்க மறுத்ததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது" எனக்கூறியுள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ''எல்லோரும் அவங்க வேலையை பார்த்துட்டு போறப்ப டிக்கெட் இருக்குல்லா ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னு கேட்ட அந்த குரல்தான் இதுபோன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடைதான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சினைன்னா அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரீகம் ரொம்ப தூரத்தில் இருக்கு'' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்